Saturday 28 July 2012

இன்றைய கல்வி முறை - சரியான பாதையில் போகிறதா?

இன்றைய கல்வி முறை சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறதா என்று கல்வியாளர்கள் மிக அவசரமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். கல்வி என்பது இப்பொழுது வணிக மயமாகிவிட்டது.


Saturday 14 July 2012

பண்பாடு தழுவிய தமிழ் கற்றலும் கற்பித்தலும்

இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி சம காலத்தேவைகளுக்கே முக்கியம் கொடுத்துத்  தங்கள் கல்விப்பயணத்தை முன்னெடுத்துச்செல்கின்றனர். அதுவும் குறிப்பாகத் தேர்வு வகுப்புகளில் பயில்கின்ற மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி முற்றாகத் தேர்வுக்கே முன்னுரிமையும் முக்கியத்துவம் கொடுத்து பாடத்தைப் பயில்கின்றனர். பயிற்றுவிக்கின்றனர். இதன் விளைவாகக் கல்வி ஏற்பாட்டின் நோக்கத்தை முழுமையாக அடைய முடியாத நிலை ஏற்படுகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.  முழுமையான சமன்சீர்  வளர்ச்சியடைந்த மாணவமணிகளை (மனிதர்களை) உருவாக்கும் உன்னத  நோக்கமும் இதனால் அடைய முடியாத நிலை ஏற்படுகின்றது. கல்வி ஏற்பாட்டில் வலியுறுத்தப்படுகின்ற ஆன்ம, அறிவு, உடல், உள்ளத் தேவைகளுள் அறிவுத்தேவைக்கு மட்டுமே முக்கியத்துவம்  கொடுக்கப்படுகின்றது.  உடல்வளர்ச்சித் தேவையும் உள்ள வளர்ச்சித் தேவையும்  ஆன்மீக வளர்ச்சியும் புறந்தள்ளப்படுகின்றன. இவற்றோடு சேர்ந்து பண்பாட்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல் ஓரங்கட்டப்படுகின்றன. இச்சூழலிருந்து மீள மொழியாசிரியர்கள பெரிதும் பங்காற்ற முடியும். மொழித்திறன்களாகிய பேசுதிறன், செவிமடுத்தல் திறன், படித்தல் திறன், எழுதுதிறன், இலக்கணம், இலக்கியம் ஆகிய கூறுகளோடு பண்பாட்டுக்கூறுகளையும் இணைத்துக் கற்றல் கற்பித்தலை மேற்கொண்டால் குறுகிய நோக்கக்கல்வியின் எதிர்மறை விளைவுகளிருந்து மாணவர்களைக் காப்பாற்றலாம்..
இன்றைய கல்வி முறையில் பலவற்றைப் புகுத்திக் கற்பிக்கவேண்டும் என்று கல்வி ஏற்பாடு எதிர்பார்க்கின்றது. பொது அறிவு, நற்பண்பு (மனித விழுமியங்கள்), சமுதாய பண்பாட்டு நெறிமுறைகள், பல்வகை நுண்ணறிவு, வாணாள் கல்வி, எதிர்காலவியல், தகவல் தொழில் நுட்பத்திறன், தொழில்முனைவம், ஆக்கமும் புத்தாக்கமும்,  குடிமையியல், சிந்திக்கும் திறன் அல்லது சிந்திக்கும் வழிமுறை, சுற்றுசூழல் கல்வி, அறிவியல் திறன், சிக்கல் தீர்வு, பயனீட்டாளர் கல்வி போன்ற கூறுகளை பாடத்தின்போது புகுத்த வேண்டும் என்று மலேசிய தொடக்கப்பள்ளித் தர ஆவணம் பரிந்துரைக்கின்றது. இவற்றோடு பண்பாட்டுக்கூறுகளையும் நமது பாடத்தில் புகுத்தினால் சமன்சீர் மாந்தன் உருவாக வாய்ப்புள்ளது.  
பண்பாடு என்றால் என்ன?
பண்பாடு பற்றிப் பலர் விளக்கம் கூற முற்பட்டுள்ளர்.  அவர்களுள் அறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள்  தந்த விளக்கம் இங்குக் கருதத் தக்கது. சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டையே பண்பாடு என்கின்றோம் என்கின்றார் அவர். அந்த வெளிப்பாடு சுவையுணர்வாகவும் நடையுடை பாவனையாகவும் தோன்றும். அது மக்கள் கூட்டத்தின் சிறப்பியல்பாகவும்  தனி மக்களின் சிறப்பியல்பாகவும் விளங்கும்போதே பண்பாடு எனக் குறிக்கப்படுகின்றது என மேலும் விவரிக்கின்றார் தெ.பொ.மீ.  மக்களின் பழைய வரலாற்றில் அவர்கள் இயற்றிக்கொண்ட கருவிகள், சமூகப்பழக்கம், வழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றை பண்பாடு என்ற சொல்லால் குறிக்கின்றனர் என . தட்சணாமூர்த்தி குறிப்பிடுகின்றனர். பண்பாடு என்பது மனிதன் சமூகத்தில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு பெற்ற அறிவு, போற்றிய நம்பிக்கை, கலை, நெறி, சட்டம், சமூக வழக்கம், மனிதனின் இதர ஆற்றல்கள், பழகிக்கொண்ட பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலும்செறிவும் மிக்க ஒரு முழுமைத்தொகுப்பு எனப் பண்பாடு எனும் சொல்லிற்கு வரையறை கூறியுள்ளார் பிரிட்டிஷ் மாந்தவியல் தந்தை எனப் போற்றப்படும் டைலர் (Tylor). Culture is defined as ‘that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society’ இவ்வளவு செறிவுமிக்க பண்பாடு பற்றிய அறிவு மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?     
பாடத்தில் புகுத்துவற்குரிய  பண்பாட்டுக்கூறுகள்
தமிழர் வரலாறு, உடை, இறப்பு, ஈமச்சடங்கு, தமிழர் விளையாட்டுகள், சமய வாழ்வு, தமிழர்  நம்பிக்கைகள், சமய விழாக்கள், தமிழர் இசை, சிற்பக்கலை, தமிழர் நடனம்/ நாட்டியக் கலை, கட்டிடக்கலை, ஓவியக்கலை, தமிழர் மருத்துவம் போன்றைவையாகும்.
பண்பாடு பற்றிய அறிவினால் விளையும் நன்மைகள்
பண்பாட்டினால்  உள்ளொளி பெருகும்; உயிர்த்தத்துவம் மிளிரும்; பிறர் மீது அன்பும் அருளும் மிகும்; சமுதாயத்தில் உள்ள விழுமியங்கள் சமுதாய உறுப்பினர்களாகிய மாணவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைகின்றது. அதனைப் பின்பற்றி வாழவும் இது வழிவகுக்கின்றது. |

சமுதாயத்தில்
  ஒரு தீவாக வாழாமல் தோப்பாக வாழும் நிலைக்கு உயர்த்தப்படும். தனி மரம் தோப்பாக ஆகாது என்பன போன்ற விழிப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. சமூக உறுப்பினர்களின் செயற்பாட்டினை, சமூகப் பழக்கவழக்கங்களை அறிந்து ஊரோடு ஒட்டி வாழும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தப் பண்பாட்டுக்கல்வி உதவும் .  .

எப்படிப் பண்பாட்டுக்கூறுகளைப் பாடத்தில் புகுத்துவது?
எல்லா வேளயிலும் பண்பாட்டுக்கூறுகளைப் புகுத்த முடியுமா? பொருத்தமான இடங்களில் மட்டுமே புகுத்துதல் சிறப்பு. பண்பாட்டைப் போதிக்கப்போகின்றேன்  என்று எடுத்துக்கொண்ட பாடநோக்கத்தை விட்டு விலகுதல்  சரியன்று. பள்ளிகளில்; பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றுள் மொழிப்பாடமே பண்பாட்டுக்கூறுகளைப் புகுத்தப் பொருத்தமான பாடமாக அமைகின்றது. மொழிப்பாடத்தில் பொதுவாக பாடப்பொருள், மொழித்திறன் , ஒருங்கிணைப்பு நிகழ்வது வழக்கம். அவற்றோடு  பண்பாட்டுக்கூறுகளையும் இணைத்துக்கற்பித்தால் மொழித்திறனோடு பண்பாட்டையும்  அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
பண்பாடு தழுவிய இலக்கணப்பாடம்
இலக்கணம் கற்பிக்கும்பொழுது நமது பண்பாடு தொடர்பான செய்திகளைப் புகுத்தலாம்.  பெயர்வகைகள் கற்பிக்கும்பொழுது குறிப்பாகக் காலப்பெயர் பற்றி விளக்குபொழுது நமது தமிழ் மாதங்களாகிய சித்திரை வைகாசி ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களை  வரிசைக் கிரமமாகச் சொல்லப் பயிற்றுவிக்கலாம். இதன்வழி ஆங்கில மாதத்தைத்  தமிழ் மாதத்தையும்  அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.   இதனோடு நம் சமுதாயத்தினர் கொண்டாடும் சமய விழாக்களயும்  அவ்வமயம் நாம் அறிமுகப்படுத்தலாம்.  ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கொண்டாடப் படுகின்ற தமிழ்ப் பண்டிகைகள், திருவிழாக்கள் பற்றிக் கற்பிக்கலாம்.

சித்திரையில்
, சித்திரைப் பருவம், வைகாசியில் விசாகம், ஆனி மஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணியில் புதுமனை புகுதல், புரட்டாசியில் நவராத்திரி , விநாயகர் சதுர்த்தி, ஐப்பசியில் தீபாவளி, கந்த சஷ்டி விரதம்,  கார்த்திகையில் கார்த்திகைத் தீபம், மார்கழியில் பாவைநோன்பு, திருவாதிரை, தையில் தைப்பூசம் போன்ற சமுதாய சமய நிகழ்வுகள் அவர்களுக்குத் தாங்கள் சார்ந்த சமய அறிவும், சமூக அறிவும் பெற்று நல்ல குடிமகனாக வாழும் வாய்ப்பை ஏற்படுத்தும். இதே போன்று இடப்பெயர் பற்றிக் கற்பிக்கும்பொழுது தமிழர் ஐவகை நிலப்பாகுபாடு பற்றிக் குறிப்பிடலாம்.


இலக்கணம் கற்பிக்கும்பொழுது சூழ்நிலைக்கேற்ப நமது  பண்பாடு தொடர்பான செய்திகளைத் தகவலாகக் கூறிச்செல்லாம். இலக்ணப்பாடத்தை வெறும் இலக்ணப்பாடமாக நடத்தாமல் மாணவர்களது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சமயச்செய்திகளும்  சமூகச் செய்திகளும் அவர்களைச் சமூகம் சார்ந்த மனிதர்களாக வாழ வழி வகுக்கும் என நம்பலாம்.
இலக்கியப்பாடத்தில் பண்பாடு
செய்யுள் கற்பிக்கும்பொழுது நமது பண்பாட்டில் போற்றப்படும்  விழுமியங்கள் இயல்பாகவே அப்பாடத்தின் வழி மாணவர்களைச் சென்றடையும். ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,உலகநீதி, நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம், ,நாலடியார், திருக்குறள் முதலியவற்றை மொழிப்பாடத்தின்போது கற்பிக்கும்பொழுது நேரடியாகவோ  மறைமுகமாகவோ நமது பண்பாட்டின் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்குச் சென்றடைவதை உறுதி செய்யலாம்.
இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், நளவெண்பா, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை போன்ற கிராமிய, இதிகாசக் கதைகள், அவற்றில் உள்ள கிளைக்கதைகள்  கூட நமது பண்பாட்டினை வளர்க்கப் பெரிதும் பயன்படும். மேற்காணும் விழுமியங்கள் நிறைந்த  பண்பாடு தொடர்பான கதைகளை மொழிப்பாடத்தில் பயன்படுத்துவது பண்பாடு பேண உதவும்.   
பண்பாடும் மொழித்திறன்கள் கற்பித்தலும்
செவிமடுத்தல் திறன்
மொழிப் பாடத்தில்  பேசுதிறன் செவிமடுத்தல் திறன் கற்பிப்பது வழமையான ஒன்று. அவ்வமயம் பண்பாட்டுக்கூறுகளையும்   புகுத்தி மொழிப்பாடத்தை நடத்துவதற்கு இடம் உள்ளது. குறிப்பாக, நாடகம், கதை, கவிதை போன்றவற்றைச் செவிமடுத்தல் திறன் நடத்தும்பொழுது  பண்பாட்டுக் கூறுகள் உள்ள பாடப்பகுதிகளைப் பயன்படுத்தலாம். எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் உள்ள கதை, கவிதை, நாடகம்,

இசைப்பாடல் போன்றவற்றைத் தெரிவு செய்வது மாணவர்களின் பின்புல அறிவைப் பொருத்து ஆசிரியர் நிர்ணயித்துக் கொள்ளுதல் வேண்டும்.  இப்பொழுதெல்லாம் இணையங்களில் பல உரைகள், பாடல்கள், நாடகங்கள் காணப்படுகின்றன.  அவற்றை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். செறிவட்டுகளும் கூட சந்தையில் நிறையவே உள்ளன. சுகி.சிவம் போன்றோரின் சமய தன்முனைப்பு உரைகள் பெரிதும் மாணவர்களைக் கவரும் என்பது திண்ணம்.    
பேசுதிறன்
ஓரங்க நாடகங்கள் நடித்தல், நாடோடிப் பாடல்கள் பாடுதல், சொற்போர் பேசுதிறன் பாடத்தின்போது பண்பாடு தழுவிய  தலைப்புகளைப் பயன்படுத்தலாம்.   
வாசிக்கும் திறன்
வாசிப்புப் பாடம் நடத்தும்பொழுது கண்டிப்பாக ஆசிரியர் உரைநடைப்பகுதிகளை  மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. சிற்சில சமயங்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், உரையாடல் பகுதிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழல்களில் தேவைக்கேற்பப்  பண்பாடு தொடர்பான கருப்பொருளைக் கொண்ட பாடப்பொருளைப் பயன்படுத்தலாம். தமிழர் வரலாறு, உடை, இறப்பு, ஈமச்சடங்கு, தமிழர் விளையாட்டுகள், சமய வாழ்வு, தமிழர்  நம்பிக்கைகள், சமய விழாக்கள், தமிழர் இசை, சிற்பக்கலை, தமிழர் நடனம்/ நாட்டியக் கலை, கட்டிடக்கலை, ஓவியக்கலை, தமிழர் மருத்துவம்போன்ற தலைப்புகளில் உள்ள வாசிப்புப் பகுதிகளைப் பயன்படுத்தலாம்.
எழுது திறன்
மொழித்திறனில் கட்டுரைத்  தலைப்புகள் தெரிவு செய்யும்பொழுது பண்பாடு தொடர்பான தலைப்புகளைத் தெரிவுசெய்து மாணவர்கள் அதன் தொடர்பான ஆய்வுகளில் இறங்கும் சூழல் ஏற்படுத்தலாம்.  இதன் விளைவாக பண்பாட்டைப்பற்றி மேலும் விரிவாகவும் ஆழமாகவும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மொழிப்பாடத்தில் செயல்திட்டங்கள்
இப்பொழுதெல்லாம் கல்வி பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் மாணவர்களுக்குக் களஆய்வு மேற்கொள்ளும் சூழலை  ஏற்படுத்தி வருகின்றார்கள். செயல்திட்ட வடிவில் மதிப்பீடும் நடத்துகிறார்கள். இத்தகைய சூழல்களிலெல்லாம் பண்பாடு தொடர்பான தலைப்புகள் பண்பாட்டு அறிவினை வளர்க்கவும் கூர்மைப்படுத்தவும்  உதவும்
மொழிப்பாடத்தை வெறும் மொழி கற்பிக்கும் பாடமாகக் கருதாமல் அபாடத்தின் வழி பண்பாட்டுக்கூறுகளையும் புகுத்தினால் சமன்சீர் வளர்ந்த மாந்த இனத்தை உருவாக்க முடியும். தகவல் யுகத்தில் வெறும் தகவல் மட்டுமே தெரிந்த மனிதர்களை உருவாக்காமல் சமுதாயம் சார்ந்த மனிதர்களை உருவாக்கினால்  நாளைய உலகம் வெறும் எந்திர மயமான  உலகமாக இருக்காது. அன்பும் இரக்கமும் நிறைந்த மனித நேயமிக்க சமுதாயத்தை உருவாக்கிய புண்ணியம் நம்மையே வந்து சேரும்.    
துணை நூல்கள்
தட்சிணாமூர்த்தி, . (1999) தமிழர் நாகரிமும் பண்பாடும். சென்னை: யாழ் வெளியீடு
Lucy Mair (1975) An Introduction to Sociall Anthropology. London: Oxford University Press.
பாட்த்திட்டம்: தமிழ் மொழி. கல்வி அமைச்சு குவாலாலும்பூர் டெவான் பஹாசா டான் புஷ்தாக்கா (1983)
தமிழ்மொழித் தர ஆவணம் (2010) கல்வி அமைச்சு குவாலாலும்பூர்  பாட்த்திட்ட மேம்பாட்டுக் கழகம்
  கணிதப்பாட்த்தில் எண்கள் பற்றிக் கற்பிக்கும்பொழுது தமிழ் எண்களை அறிமுகப்படுத்தலாம்.