Friday 3 August 2012

பன்மொழிச்சூழலில் தமிழின் நிலை

மலேசிய நாட்டில் பன்மொழிச் சூழலில் ஆசிரியக் கல்வி நிறுவனங்களில்  இயங்கும் தமிழ்ப் பிரிவின் கற்றல் கற்பித்தல் சூழலும் பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி மாணவர்களின் பேச்சுத் தமிழில் பிற மொழித் தாக்கமும் 
சிவநேசன் இராஜுஆசிரியக் கல்வி நிறுவனம் ஈப்போ வளாகம்
உளு கிந்தா, பேரா, மலேசியா

மலேசிய நாட்டில் ஏறக்குறைய 523 தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் இருக்கின்றன. இந்த 523 தமிழ்த் தொடக்கப் பள்ளிகளில் ஏறக்குறைய 8000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவர்க்கும் நாட்டில் உள்ள 28 ஆசிரியக் கல்வி நிறுவனங்களுள் 6 கல்வி  நிறுவனங்கள் பயிற்சி வழங்குகின்றன.

இந்த 6 ஆசிரியக் கல்வி நிறுவனத்தின் வழியாகத்தான் நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ்மொழி கற்பிக்கும்  ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். இவர்களைப் பயிற்றுவிப்பதில் ஆசிரியக் கல்வி நிறுவனத்தில் மொழித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்ப்பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி

நாட்டில் இயங்கும் ஒவ்வொரு ஆசிரியக் கல்வி நிறுவனமும் பல துறைகளைக் கொண்டுள்ளது. அவற்றின் வழியாக ஆசிரியக் கல்வி தொடர்பான பாடங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. காட்டாக, அறிவியல் பாட ஆசிரியராக வர விரும்புகின்றவர் அறிவியல் துறையில் அறிவியல் பற்றிய பாட அறிவும் அறிவியல் கற்பித்தல்  தொடர்பான அறிவினையும் பெறுவர்.


 கல்வி, மனவியல், கற்பித்தலியல், வகுப்பு மேலாண்மை, கல்வித் தத்துவம், கல்விச் சமூகவியல் முதாலான அறிவினை கல்வித் துறையில் பெறுவர். இவற்றைத்தவிர தகவல் தொழில் நுட்பம், நன்னெறி, இசுலாமிய நாகரிகம், உடற்கல்வி ஆகிய பாடங்களையும் வெவ்வேறு துறைகளின் வழியாகப் பாட அறிவினைப் பெறுவர்.  கற்பித்தல் பட்டறிவினைப் பயிற்றுப்பயிற்சியின் போது பெறுவர். தேர்ச்சி பெற்ற பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி முடிந்ததும் ஆசிரியக் கல்வியில் சான்றிதழ்  அல்லது பட்டயம் வழங்கப்படுகிறது.

மொழித்துறையின் கீழ் தமிழ்ப்பிரிவு

ஆசிரியக் கல்வி நிறுவனங்களில் பல துறைகள் உள்ளன. கல்வி, சமூக அறிவியல்,   மொழி,  மலாய்மொழி, அறிவியல் கணிதம், உடற்கல்வி, இசுலாமியம் நன்னெறி, தகவல் தொழில்நுட்பம் என இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப ஆசிரியக் கல்வி நிறுவங்களில் துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மொழித்துறையின்கீழ் தமிழ், சீனம், ஆங்கிலம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தமிழ்ப்பிரிவு மொழித்துறையின் கீழ் இயங்குகின்றது. 

ஆசிரியக் கல்வி நிறுவனங்களில் தமிழ் ஆசிரியர் பயிற்சி
ஆசிரியக் கல்வி நிறுவனங்களில் செயல்படும் தமிழ் ஆசிரியர் பயிற்சியினை மூன்று வகையாகப் பாகுபடுத்தலாம்:  பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியக் கல்விப் பயிற்சி (KPLI);  இளங்கலை ஆசிரியக் கல்விப் பட்டதாரி திட்டம் (PISMP); விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சித் திட்டம். முன்னது பட்டதாரிகளுக்கான பயிற்சி. பின் இரண்டும் ஐந்தாம் படிவம் ஆறாம் படிவம் வரை பயின்ற மாணவர்களுக்கான பயிற்சி.

 கல்வி அமைச்சின் இன்றைய கொள்கை தொடக்கப்பள்ளிகளில் குறைந்த பட்சம் இளங்கலைத் தகுதியை உடைய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதே. இப்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தமிழ்க் கற்பிக்கும் பொறுப்பும் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் முறை பற்றியும் பயிற்சி வழங்குவது தமிழ்ப் பிரிவின் பொறுப்பாக அமைகின்றது.  

பயிற்சியில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பின்னணி. 
பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி (KPLI) மாணவர்களின் பின்னணி பல்வேறு பட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையுடைவர்களே தமிழை முதன்மைப் பாடமாகப் பல்கலைக் கழகத்தில் படித்து தமிழ்த் துறையில் தேர்ந்து பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.

 பெரும்பாலான பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி (KPLI) மாணவர்கள் தமிழ்த்துறை அல்லாத பிற துறைகளிலேயே பட்டங்களைப் பெற்று வந்துள்ளனர். நிர்வாகம், வணிகம் , வங்கியியல், தகவல் தொழில்நுட்பம், பரவைசார்  உயிரியல் போன்ற பாடங்களையே முதன்மைப் பாடமாகப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்களைக் காண்கிறோம்.

 அவர்கள் பெரும்பாலும்  SPM / STPM வரை தமிழ் பயின்றவர்களாக இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களின் முறைசார் தமிழ்ப் புழக்கம் பல்கலைக் கழகங்களில்  மிகக் குறைவே. அவர்கள் பெரும்பாலும் தேசிய மொழியிலோ ஆங்கிலமொழியிலோதான் தங்கள் பட்டப் படிப்பை பயில்கிறார்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.  
ஆசிரியக் கல்வி நிறுவனத்தில் கற்றல் சூழல்


பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி (KPLI) ஓராண்டுக் காலம் நடத்தப்படுகின்றது. ஓர் ஆண்டில் இரண்டு பருவங்கள் உள்ளன. முதல் பருவத்தில் தமிழ்ப் பிரிவில் தமிழ்  பற்றிய பாட அறிவும் தமிழ் கற்பித்தல்  தொடர்பான அறிவினையும் பெறுவர். கல்வி, மனவியல், கற்பித்தலியல், வகுப்பு மேலாண்மை, கல்வித் தத்துவம், கல்விச் சமூகவியல் முதாலான அறிவினைக் கல்வித் துறையில் பெறுவர்.

 இவற்றைத்தவிர தகவல் தொழில் நுட்பம், நன்னெறி, இசுலாமிய நாகரிகம், உடற்கல்வி ஆகிய பாடங்களையும் வெவ்வேறு துறைகளின் வழியாக பாட அறிவினைப் பெறுவர். தமிழ்ப் பாடத்தைத் தவிர்த்துப் பிற பாடங்கள் அனைத்தும் ஆசிரியக் கல்வி நிறுவனங்களில் தேசிய மொழியிலேயே நடத்தப்படுகின்றன. தமிழ் கற்பித்தல் பட்டறிவினைப் பயிற்றுப்பயிற்சியின் போது பெறுவர். இது 12 வாரத்திற்குத் தமிழ்ப் பள்ளிகளில் நடைபெறும். பள்ளியில் நிரந்தரமாகப் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் ஒருவர் வழிகாட்டி/ஆலோசக ஆசிரியராக இருந்து பயிற்சி ஆசிரியர்க்கு வழிகாட்டி உதவுவார்.

  ஆசிரியக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளரும் பள்ளிக்குச் சென்று 3/4 முறை கற்பித்தலைக் கண்காணிப்பார்; பணித்திற ஆலோசனைகளை வழங்குவார்; மதிப்பீடும் செய்வார். தேர்ச்சி பெற்ற பயிற்சி ஆசிரியர்களுக்குப் பயிற்சி முடிந்ததும் ஆசிரியக் கல்வியில் பட்டயம் வழங்கப்படுகிறது.    

தமிழ் ஆசிரியர் பயிற்சி பெறுகின்ற ஒருவர் தமிழ்ப் பிரிவு மாணவராக ஆசிரியக் கல்வி நிறுவனத்திற்குள் நுழைவார். வாரத்திற்கு ஏழு மணிநேரம் தமிழ் மொழியில் தமிழ்ப் பாடங்களைப் பயில நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடம் என்பது தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், மொழித்திறன், பயிற்றியல் ஆகியவற்றைக் குறிக்கும்.   

பன்மொழிச்சூழல்

பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி (KPLI) தமிழ்ப் பிரிவு மாணவர் ஒருவர் தமிழை முதன்மைப் பாடமாகப் (8) படிப்பார். இரண்டு பாடங்களை துணைப்பாடமாகப் படிப்பர்: கணிதம் (4), வட்டாரக் கல்வி (4) அல்லது இதர துணைப்பாடங்கள். இவற்றோடு  கல்வித்துறையில் கல்வியியல் (7), (மனவியல், கற்பித்தலியல், வகுப்பு மேலாண்மை, கல்வித் தத்துவம், கல்விச் சமூகவியல், செயலாய்வு) படிப்பர்.

இவற்றைத் தவிர்த்து,   நாடு இனம் பற்றிய கல்வி (1) , நன்னெறி(1), இசுலாமிய நாகரிகம்(1), தொடர்புக்கான மலாய் மொழி(1), சுற்றுச்சூழல் கல்வி (1), கல்வித் தொழில் நுட்பம்(1), தகவல் தொழில் நுட்பம்(1), உடற்கல்வி (1), இசைக்கல்வி (1),  ஆகிய பாடங்களையும் வெவ்வேறு துறைகளில் தேசிய மொழியாம் மலாய் மொழியிலேயே படிக்கின்றனர். மொத்தக் கற்பித்தல் நேரத்தில் முதன்மைப் பாடம் 8 மதிப்புமணிநேரமும் இதர பாடங்கள் 27 மதிப்புமணிநேரமும் 6 மதிப்புமணிநேரம் பயிற்றுப்பயிற்சியும் செய்கின்றனர்.
   
கல்விக் கழகங்களில் தமிழ்ப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கும் பாடங்கள்

ஆசிரியக் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் தமிழ்ப் பள்ளியில் பின்வரும் பாடங்களைக் கற்பிக்கும் நிலையில் உள்ளார்: தமிழ் மொழி, கணிதம், அறிவியல், நன்னெறி, இசை, உடற்கல்வி, கலைக்கல்வி, வாழ்க்கைக் கல்வி, வட்டாரக்கல்வி, குடியியலும் குடியுரிமைக் கல்வியும் ஆகிய பாடங்களாகும்.

 மேற்குறிப்பிட்ட பாடங்களுள் கணிதம் அறிவியல் தவிர மற்ற பாடங்கள் அனைத்தும் தமிழ்ப் பள்ளிகளில்  தமிழ் மொழியிலேயே நடத்தப்படவேண்டும்.  இவ்வாறு பல பாடங்களைத் தமிழ் மொழியில் கற்பிக்கும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்ப் பயிற்சி  ஆசிரியர்கள் உள்ளனர்.

பன்மொழிச் சூழலில் தமிழ்ப்பயிற்சி ஆசிரியர்களின் மொழி நிலை 
பன்மொழிச் சூழலில் தமிழ்ப் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஆசிரியக் கல்வி தொடர்பான அறிவினை ஆசிரியக் கல்விக் கழகங்களில் மலாய் மொழியிலேயே பெறுகின்றனர். அதே நேரத்தில் ஆங்கில மொழியிலும் கூட சில பாடங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய பன்மொழிச் சூழலில் பயிற்றுவிக்கப்படுகின்ற தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களின் அன்றாட உரையாடலில் பன்மொழிச்சூழல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

பன்மொழிச் சூழலில் தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களின் பொதுவான பேச்சுத் தமிழ் நிலை

பல மொழிகள் பேசப்படுகின்ற மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் கலந்து பேசப்படுவதைக் காணமுடிகிறது. அதுவும் குறிப்பாகப் பலதுறைகள் பலமொழிகளில் பயன்படுத்தப்படுகின்ற ஆசிரியக் கல்வி நிறுவனங்கள் போன்ற கல்விச் சாலைகளில் ஒரு மொழி ஆதிக்கம் அதிகம் இருக்கின்ற சூழலில் தமிழ் மொழிப்பயன்பாடு பல வித மொழித் தாக்குதலுக்கு உட்படுகின்றது.
  
விரிவுரை எனும் தமிழ்ச் சொல்லிருக்க பெரும்பாலான பயிற்சி ஆசிரியர்கள் “கூலியா” அல்லது “லெக்சர்” எனும் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்துவது கண்கூடாகப் பார்க்கலாம். நேரம் எனும் தமிழ்ச் சொல்லிருக்க ‘டைம்’ எத்தனை? வகுப்பு எனும் சொல்லுக்குப் பதிலாக “கிலாஸ்”, “நொட்டிஸ் போட்”, “லெக்சர் தியேட்டார்”, “டேவான்”, “பெஙாரா”, “பெஙெதுவா”, “தீம்பாலான்”, அஸ்ரமா”, “பீ ஜே”, “மேத்ஸ் பாடம்”, “சாய்ன்ஸ் பாடம்”, “மோரல்”, “மியூசிக்”, “செனி”, “லவ்:”, ‘சிகாப்”, ‘செனாங்’, “ஈசி”, “பாதர்”, “மாதர்”, “சிஸ்டர்”, “பிரதர்”, “லேப்”, “லைப்ரரி” முதலிய சொற்கள் பயிற்சி ஆசிரியர்களின் உரையாடலின் போது சர்வ சாதாரணமாகக் புழங்குவதைக் காணமுடிகிறது.  

ஆய்வு நோக்கம்
ஆசிரியக் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் வகுப்பறை, விடுதி, சிற்றுண்டிச்சாலை என எந்த இடமாக இருந்தாலும் சரி எல்லா இடங்களிலும் பயிற்சி ஆசிரியர்களின் உரையாடலின்போது  நிறைய வேற்றுமொழிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகின்றது. பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழி உரையாடலின்பொழுது பிறமொழிச் சொற்களின் பயன்பாடு எந்த அளவிற்கு உள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்கள்

கல்விக் கழகத்தில் பயிலும் பட்டத்திற்குப் பிந்திய ஆசிரியப் பயிற்சி மாணவர்கள்       (KPLI) 56 பேர் இவ்வாய்வில் பங்கேற்பாளராயினர்.    

கால அவகாசம்
ஒரு  வாரம்

தரவு பெற்ற முறை

பயிற்சி ஆசிரியரிகளின் மத்தியிலேயே தகவல் திரட்டுநர்கள் சிலர் நியமிக்கப்பட்டனர். அறைக்கு ஒரு நோக்கர்; வகுப்பில் ஐவர்க்கு ஒருவர். தமிழ் மொழியினூடே பயன்படுத்தப்படும் வேற்று மொழிச் சொற்களை பதிவு செய்தல். குறித்துக்கொள்ளல். 15 தகவல் திரட்டுநர்களும் முடிவு செய்யப்பட ஒரு வார காலத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை) குறிப்பேட்டுடன் இருக்கவேண்டும். அவர்கள் தமிழ் மாணவர்கள் பேசும்பொழுது பயன் படுத்தும் வேற்றுமொழிச்சொற்களையும் சொற்றொடர்களையும் உடனுக்குடன் குறித்துக் கொள்ளல் வேண்டும். எட்டாம் நாள் காலையில் அனைத்தையும் எழுதி ஆய்வாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

தரவு சேகரிப்பு உத்திகள்

ஒலிப்பதிவு செய்தல்
உற்று நோக்கல்
கேட்டல்
குறிப்பெடுத்தல்
தரவு ஆய்வு
வகைப்படுத்துதல்

தரவு ஆய்வும் முடிவும்

ஆசிரியக் கல்வி நிறுவன வளாகத்தில் ஏழு நாட்கள் தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களின் தமிழ் உரையாடலில்போது பயன்படுத்தப்பட்ட  வேற்றுமொழிச் சொற்கள் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டன.

தகவல் தொழில்நுட்பச் சொற்கள்
பிரிண்டர், பென்டிரைவ், வைரஸ், சார்ஜர், எஸ் எம் எஸ், பைண்டிங், டேப், மிஸ் கால், ரிப்பேர் (பண்ணுங்க), ஹேண்ட போன், டாட்டா, லெப் டொப், ரிங் தோன், செட், ஸ்கேன், பேர்ன், மவுஸ், ஸ்கென்னர், ஸ்க்ரீன், ரிங் தோன், சைலண்ட் மோட்,

மின்சாரம் தொடர்பான சொற்கள்

•பேன், லைட், ஓன், ஓ•ப்,  டீவீ, ரேடியோ, ரைஸ் கூக்கர், ஏர் கொண்ட், பிலெண்டர்,

அலுவலகப் பயன்பாட்டுச் சொற்கள்

போஸ்டிங், டைப், ரெஜிஸ்டர், எம் சி, •பைல், அல்பம், போட்டொஸ்டேட், புக், 
•போர்ம், •போல்டர், டேப், , லெட்டர், கவர், என்வலப்,
ரேஹாட்(ம), லாபோரான்(ம)

வகுப்பறைப் பயன்பாட்டுச் சொற்கள்

எஸ்ஸாய்ன்மென், ஹோம் வார்க், நம்பர், குருப் வார்க், டொப்பிக், , ஸ்க்ரேப் புக், அட்டாச் , அட்டெண்டன்ஸ், , கோர்ஸ் வார்க், ஏ4 பேப்பர்,  •பிரி பாடம், ரிலீ•ப் பாடம், நோட்ஸ், டைம் டேபல், ஹோம் வேர்க், பிரசெண்டேசன், ரூலர், வாய்ட் போர்ட், மார்க்கர் பென், ஸ்தார்ட், டஸ்டர், பாஸ் ஆப், போஸ்டர்,
ஏபீஎம் (ம), கோசோங் (ம), சார்ட்டா ஒர்கனாசாசி (ம),

பாடம் தொடர்பான சொற்கள்

சாய்ன்ஸ், மேத்ஸ், மோரல், இங்லிஸ், பெடகோஜி,  கவுன்சிலிங், மைக்ரோ டீச்சிங், மெக்ரோ டீச்சிங், பிரக்டிக்கம், புரஜெக், மியூசிக் கிலாஸ்,
கே தி (ம), கேஎச் (ம), பீஜே (ம), செனி (ம), பீஎம் (ம), பீடி (ம), பெண்டிடிகான்(ம),
தமாடுன் இஸ்லாம் (ம),

இணைப்பாடம் தொடர்பான சொற்கள் (சீருடை இயக்கம், போட்டி
விளையாட்டு,  கழகங்கள் )

லோகோ, பேட்ஜ், யூனி•ப்போர்ம், கேம்ப்பிங், , ஸ்போர்ட்ஸ் பிரக்டீஸ்,   பிரக்டீஸ், டிரேய்னிங், கோச், அக்டி•, 
கோகோ (ம), பீனா இன்சான் (ம), குரு பெனாசிஹாட் (ம), பென்சாரா பெனாசிஹாட் (ம), பெர்சத்துவான் (ம), பாடான் யூனி•போர்ம் (ம), பெர்மய்னான்(ம)
(ச்)செமெர்லாங் (ம), கெபூஜியான் (ம),

இடப்பெயர்

கல்லூரியில் / பள்ளியில்
ஸ்கூல், லைப்ரரி, கிலாஸ், ரூம், பாத் ரூம், ஒ•பீஸ், கெண்டீன், டாய்லெட்
கொப்பராசி(ம), டேவான், பாடாங், ஜிம்,

பொது இடங்கள்

பேங்க், சூப்பர்மார்க்கெட், க•பே, செர்ச், டெம்பல்,
பசார் மாலாம் (ம)
வீடு/ விடுதி
ஹால், கிட்ச்சன்
காலப்பெயர்
டைம், சீசன், நைட்

பண்புப்பெயர்
நிறங்கள்: பேர்ப்பல், ஓரேஞ், பிங்க், மரூன், ரோஸ், கலர்
உணர்வு தொடர்பான சொற்கள்: லவ், ஹென்சம், டென்சன், ரிலெக்ஸ், தேங்க்ஸ், தெங்க்யூ, ஜோல்லியா, டாயர்ட் (ஆ இருக்கு), சாரி, பெஸ்ட், சூப்பர், ப்ளீஸ்,
குட், வெரி குட், வெரி நைஸ்,
சீரியஸ், நார்மல், லூஸ், எக்ஸ்ட்ரா, ஸ்தாண்டர்ட், மாஸ்டர்ஸ், அலேர்ட்

பொருட்பெயர்

வாகனங்கள்: பஸ், லோரி, டெக்சி, கார்,
உணவு: லன்ச், சூப், டின்னர், பிஸ்கட், அய்ஸ் கிரீம், கேக்,
மீ (சீ£), மீஹ¥ன் (சீ ), குயே தியாவ் (சீ),  லோ மீ (சீ) கரி மீ,  லக்சா (ம), குவே, நாசி லெமா,

வங்கி தொடர்பான சொற்கள்: கிரெடிட் கார்ட், ஏடிஎம் கார்ட், லோன், பேங்க்,
•பார்ம்,

பொதுவான தளவாடப்பொருட்கள்: பேக், பேப்பர், கீ, அயர்ன், பெர்ஸ், பென், ஷேம்பு,
புக், சோ•பா, கார் வாஸ், ஸ்லீப்பர், ஸ்தெப்லர், பிலாஸ்டிக், ஹேங்ஙர், போட்டல்,

ஆடை அணிகலன்கள்: ஷேட், டீ சேட், டை, பாஜூ கூரோங்,
உடல் பேணல் தொடர்பான சொற்கள்: சோப், சேம்பு, ஜெல், தவல், கோல்கேட்,
பிரஷ், “செக்காப்” போறேன்

குடும்ப உறுப்பினர்கள்: சிஸ்டர், பிரதர், •பேமிலி, டிவோர்சி, பேபி, மம்மி, டட்டி,
அண்டி, கெசின், நெபியூ, அங்க்கள், ஹபி

விளிக்கும் சொற்கள்: சார், டீச்சர், ஹெல்லோ, ச்சேகு, செர், 
பணியாளர் பெயர்: லெக்சுரர், பென்சாரா, எக்கவ்ண்டன், செக்கு

நிகழ்வுகள்
டீபாவளி நைட், •பங்சன், பேர்த்டே, வெடிங் டின்னர், மேரியஜ் •பங்சன், சீரியல்
இடைச்சொற்கள் / காரணக்கிளவிகள் 
சோ, ஓகே, எக்சுவல்லி, பட் , எனிவே,

சொற்றொடர்கள்

வகுப்பறைச் சூழலில்
வேய்ட் பண்ணுங்க
பிரின்ட் பண்ணனும்    கால் பண்ணுங்க
செலக்ட் பண்ணுங்க    கொம்ப்லீட் பண்ணுங்க
சாய்ன் பண்ணுங்க    எடிட் பண்ணனும்
டைப் பண்ணனும்    கிளிக் பண்ணுங்க
ரெஜிஸ்டர் பண்ணிடுங்க   கொன்•பேர்ம் பண்ணுங்க

ஷேர் பண்ணிக்குங்க    ஒப்சேர்வ் பண்ணனும்
டிஸ்கஸ் பண்ணுங்க    செக் பண்ணுங்க
திங்க் பண்ணுங்க    அட்டாச் பண்ணுங்க
ஸ¥க்கு போலிஷ் பண்ணனும்  சப்போர்ட் பண்ணுங்க
ஹோர்ன் பண்ணு    பே பண்ணனும்
ஹெல்ப் பண்ணுங்கப்பா   பிரே பண்ணிட்டு வரன்
பாஸ் ஆப் பண்ணுங்க    டிராய் பண்ணுப்பா
டெல்லி பண்ணுதா பாருங்க    கேன்சல் பண்ணிட்டாங்க

யூஸ் பண்ணலாம்    மிஸ் பண்ணிடாதீங்க
மீட் பண்ணிட்டிங்களா?   கொரெக்ட் பண்ணுங்க!`
துணியை வாஷ் பண்ணிட்டீங்களா  டைம் வேஸ்ட் பண்றீங்க
•பீல் பண்ணரன்    •போன் பண்ணிட்டு வரன்
•பீல் பண்ணுங்க
அட்டெண்டன்ஸ் எடுங்க   லைட் போடுங்க
ரைட் போடுங்க    ரோங் போடுங்க

சவ்ண்ட் நல்லா இல்ல   சிட்டுவேசன் சரியில்லை
இதெல்லாம் நோர்மல்   இதெல்லாம் காம்மன்
இப்ப •ப்ரி டைம்
பிள்ளைங்க ரொம்ப அக்டி•ப்ஆ இருக்காங்க.
கிளாசுக்கு போனோம்   ஆஸ்பிட்டல் போரேன் 
கோலேஜ் போரன்    செக்காப் போறேன்
வாக்கிங் போறேன்    டிரிப் போரோம் 

பிரேயர்ஸ்க்கு போரேன்   ஷோப்பிங் போகலாம்
லன்சுக்கு போகனும்    கேம்ப் போரோம்
எஸ்ஸாய்ண்மெண்ட் செய்யனும்
டைம் ஆகிவிட்டது
  
சான்ஸ் கொடுங்களா    புக்கு கொடுங்க
கொன்•பேர்ம் ஆகல    ஏர்லியா வந்திட்டீங்க
ரொம்ப லேட் போல இருக்கிறது   மொனிங் கிலாஸ் இருக்கு
டாயர்ட் ஆ இருக்கு
மீட்டிங் எப்ப?    டின்னர் எப்ப?
சூப்பரா இருக்கு   டஸ்ட்டாக இருக்கு

பேய்னா இருக்குலா   ஜோல்லியா இருக்கலாம்
டீசண்டா நடக்க மாட்டாங்கலா ஸ்மார்ட்டா இருக்கிங்க
நம்ம வாய்•ப்    நம்ம சன் / டாட்டர்  
நோ பிரோப்லாம்   வார்க்கிங் டைம்
என்ன சய்ஸ்?    என்ன கலர்?
ரொம்ப லேட்    ரொம்ப ஈசி

சோக்குப் போகாலாமா?  சொப்பிங் போலாமா?
பிரேக் ப்ஸ்ட் ஆச்சா?   லன்ச் ஆச்சா?
மலாய்ச்சொற்கள்
வகுப்பறை / வளாகச் சூழலில்
தாஜூக், லம்ப்பீரான், ஆர்.பீ எச்,

மாஜோங் பேப்பர்,
கூலியா, தக்லிமாட்,
செஜாரா, பெஙாக்காப், படான் யூனி•போர்ம், பீபீஎஸ் எம், பைப் பொம்பா
போலா பாலிங்,
பெஞெலியா, பெமந்தாவ், பெமந்தாவான்

தெரூஸ்,
பொந்தேங்,
தாரிக் துத்துப், தக்வீம் மக்தாப்,
மேமாங், தாம்பா, கச்சாவ், பியாசா,
கம்போங், பாலிக்,
மலாய் மொழியில் உணவு தொடர்பானவை
மீ கோரேங், நாசி கோரேங், ஐர் சுவாம், கீச்சாப், நாசி லெமாக், தே தாரிக்

மலாய்ச் சொற்றோடர்கள்
தாங்கோ பண்ணுவோம்  சாம்போங் பண்ணுங்க
சியாப் பண்ணியாச்சா?  ஹந்தார் பண்ணுங்க,
பீஞ்சாம் பண்றீங்களா
சீனமொழிச் சொற்கள்
தாப்பாவ் பண்ணிக்கலாம்,
அவங்க ரொம்ப கம்ச்சேங்,
கொங்சி,  

பிற பண்பாட்டுச் சொற்கள்

எக்ஸ் கியூஸ் மீ
ஆங்கில மரபுத் தாக்கம்
காலை வணக்கம்
மாலை வணக்கம்
இரவு வணக்கம்
ழகர உச்சரிப்பு தேய்கிறது

தமில், தமில் பள்ளி, பலக்கம்,
உகரம் ஒகரமாகிறது
ஒலகம்

ஆய்வு முடிவு

கணினி தொடர்பான தகவல் தொழில்நுட்பச்சொற்களைக் குறிப்பிடும்பொழுது  பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களையே தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்கள் தங்கள் தமிழ் உரையாடல்களில் பயன்படுத்துவதைக் காண முடிகின்றது. 
கல்விக் கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களைக் குறிப்பிடும்பொழுது தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்கள் பெரும்பாலும் மலாய்ச் சொற்களை அதிகம் பயன்படுத்துவ¨தைப் பார்க்க முடிகின்றது. 

சீன உணவுகளைக் குறிப்பிடும்பொழுது பெரும்பாலும் சீனப் பெயரிலேயே அவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
மலாய்ச் சொற்களின் பயன்பாடு உணவு தொடர்பான சொற்களில் அதிகம் உள்ளது. மலாய் உணவை மலாய் மொழியிலேயே சொல்வது இயல்பான ஒன்றாக இருக்கின்றது.

சொற்குறுக்கங்களைப் பெரும்பாலும் மலாய்மொழியிலேயே குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. (பீஜே, கேடி)
இணைப்பாடம் தொடர்பான சொற்களை குறிப்பாகச் சீருடை இயக்கம், போட்டி விளையாட்டு,  கழகங்கள் போன்றவவற்றைக் குறிப்பிடவும் மதிப்பீடுகளைக் குறிக்க “செமெர்லாங்”, “கெபூஜியான்” போன்ற மலாய்ச் சொற்களைப்  பயிற்சி ஆசிரியர்கள்  பெரும்பாலும் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. சிற்சில இடங்களில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டையும் காணமுடிகிறது.
கல்லூரி, பள்ளி, பொது இடங்கள், வீடு, விடுதி முதலிய இடங்களில் உள்ள இடப்பெயர்களைக் குறிக்கவும், காலப்பெயர், பண்புப்பெயர், நிறங்கள், உணர்வு தொடர்பான சொற்கள், பொருட்பெயர், வாகனங்கள், உணவு, வங்கி தொடர்பான சொற்கள்,

பொதுவான தளவாடப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உடல் பேணல் தொடர்பான சொற்கள், குடும்ப உறுப்பினர்கள், விளிக்கும் சொற்கள், நிகழ்வுகள் முதலியவற்றைக் குறிக்க ஆங்கிலச் சொற்கள் அதிகம் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. 
ஆங்காங்கே, ஆங்கில இடைச்சொற்களாகிய சோ, பட் முதலிய வாக்கிய இணைப்பிகளும் தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களின் தமிழ் உரையாடலில் விரவி வருகின்றன.

பாராட்ட ஆங்கிலச் சொற்களை விரும்பிப் பயனபடுத்துவதுபோல் தெரிகிறது. 
ஆய்வு தொடர்பான விளக்கங்கள் கருத்துகள்
தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களின் மத்தியில் இவ்வளவு எண்ணிக்கையிலான வேற்றுமொழிச் சொற்களின் பயன்பாட்டிற்குப் மலேசிய நாட்டின் பன்மொழிச் சூழல் ஒரு காரணமாக இருக்கலாமா என ஆராய்வது அவசியம். பன்மொழிச் சூழலில் பணியாற்றும் அல்லது பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக தங்கள் உரையாடலில் பிறமொழிச் சொற்களைக் கலந்துதான் பேசவேண்டுமா எனும் கேள்வியும் கூடவே எழுகிறது.

ஆசிரியக் கல்விக் கழகத்தில் பெரும்பாலான பாடங்கள் மலாய் மொழியிலேயே நடத்தப்படுகின்றன. எனினும், கழத்தின் உண்மைநிலை என்னவெனில் தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்களின் மத்தியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆங்கிலச் சொற்களாகவே இருக்கின்றன என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

பயிற்சி ஆசிரியர்களின் அன்றாடத் தமிழ் உரையாடலில் இவ்வளவு அதிகமான பிறமொழிச் சொற்கள் கலந்திருப்பது அவர்களிடம் ஒரு மொழியைப் பேசினால் அதன் புனிதத் தன்மை கெடாமல் பேசுதல்தான் முறை என்ற விழிப்புணர்வு இல்லாதிருப்பது மற்றொரு காரணமாகவும் இருக்கலாம்.  மொழிப்பற்று இன்மையே இதன் காரணம் என்று மொழியை அதிகம் நேசிக்கின்றவர்கள் கூறுகின்றார்கள். தமிழர்களுக்கு இயல்பாகவே ஆங்கில மொழி மீது உள்ள மதிப்பும் மோகமும் காரணமாக இருக்கலாம். பன்னீர் செல்வம் (1990) தமிழர்களுக்கு ஒரு விதமான தாழ்வு ம்னப்பான்மை உள்ளது என்று கூறுகின்றார். அவர்கள் ஒரு வித உளவியல் சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள் என்றும் அவர் கருதுகிறார்.

அவர்கள் சூழ்நிலையின் கைதியாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்கின்றார்களோ என்று எண்ணவும் இடம் இருக்கின்றது.
அல்லது எது எளிதில் கிடைக்கிறதோ அதை உடனே பிடித்துக் கொள்ளும் மனித மனப் போக்கால் இத்தகைய சூழல் ஏற்படுகிறதோ என்று எண்ணவும் இடம் உண்டு.
அல்லது வேண்டிய முயற்சி எடுத்துத் தேவையான தமிழ்ச்சொற்களை
அறிந்துகொள்வதில் அக்கறை இன்மை காரணமாக் கூட இருக்கலாம். அல்லது சொல்ல நினைக்கின்ற கருத்தை எப்படிச் சொன்னால் என்ன கேட்கின்றவர்களுக்குப் புரிந்தால் சரி என்ற எண்ணமா என்றும் ஆராய வேண்டியுள்ளது.

அவர்களுக்குத் தமிழ்ச் சொற்களஞ்சிய வெ(வ)றுமை ஏற்பட்டுள்ளதோ? தமிழ் மொழி அவர்களுக்குத் தேவையான சொற்களஞ்சியத்தைக் கொண்டிருக்கவில்லை என்று கருத இடம் இருக்கின்றதா?  இவ்வாறு பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவது தவறு என்று வன்மையாகக் கண்டிக்கின்றவர்கள் குறைவோ என்று எண்ணவும் இடம் உள்ளது. ஒரு மொழியைப் பேசுகின்றபொழுது அதன் தனித் தன்மைக்கு களங்கம் ஏற்படா வண்ணம் பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லையா? ஆங்கிலத்தைப் பேசும் பொழுது யாரும் இவ்வாறு தமிழ்ச் சொற்களையோ மலாய்ச் சொற்களையோ கலந்து பேசுவதாகத் தெரியவில்லையே என்று சுற்றுச்சூழல் நடப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் தன்மை அவர்களிடம் இல்லாதிருப்பது காரணமாகவும் இருக்கலாம்.

தமிழ் மொழியில் கணினி தகவல் தொடர்பு தொடர்பான கலைச்சொற்கள் குறைவா? அல்லது தமிழ் மொழியில் படைக்கப்பட்ட / உருவாக்கப்பட்ட கலைச்சொற்களின் பயன்பாடு கல்வியாளர்கள்/ஆசிரியர்கள் மத்தியில் மிகக் குறைவா? அல்லது பரவ வில்லையோ என்று எண்ணக் கூட இடம் இருக்கிறது. 

வீட்டுத் தாக்கம், தொலைக்காட்சியின் தாக்கம், வானொலித் தாக்கம்,
பள்ளிச்சூழல்
கூட இத்தகைய நிலைக்குக் காரணமாக இருக்கலாம். ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் தமிழ் மொழியின் இயற்கைத் தன்மை என்பது தமிழக மக்கள் தொலைக்காட்சியைத் தவிர்த்து இதர தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நமக்குக் கற்றுத் தந்த முன்மாதிரிகளோ என்று எண்ணவும் தோன்றுகிறது.  
தமிழ் நேர ஒதுக்கீடு ஆசிரியக் கல்வி நிறுவனங்களில் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாமா என்று கூட நாம் ஆய்வு கொள்ளுதல் அவசியம்.

முடிவு

தமிழைப் பல்வேறு தரப்பினர் பேசுகின்றனர். நாட்டு வாரியாக இந்தியத்  தமிழர்கள்,  மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், கனடியத் தமிழர்கள், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள், மொரேசியஸ் தமிழர்கள், பிஜித் தமிழர்கள்,  பர்மியத் தமிழர்கள், இந்தோனேசியத் தமிழர்கள், என நாட்டுவாரியாகப் பிரிக்கலாம். விடுபட்ட நாடுகளையும் இவ்வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.  அவர்களின் பேச்சுவழக்கில் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என ஆராய்வது நமக்கு புதுத் தகவல்களை வழங்கலாம். தமிழகத்தைப் பொறுத்த அளவில் வட்டார வழக்கு வேரூன்றிய ஒன்று. ஒவ்வொரு வட்டார மக்களும் தங்களுக்கே உரிய பாணியில் ஒவ்வொரு விதமாகப் பேசுகின்றனர். தமிழர்கள் யாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டில் வசித்தாலும் சரி, எந்த வட்டார வழக்கில் பேசினாலும் சரி அவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரத் தாக்கிக் கொண்டிருப்பது பிறமொழித் தாக்கம் எனின் அது மிகையாகாது. அதுவும் குறிப்பாக ஆங்கில மொழித் தாக்கம் அளவுக்கு மீறிவிட்டது. 

பிறமொழித் தாக்கம் அவர்கள் வாழுகின்ற சூழலைப் பொறுத்து அமைகின்றது. எம்மொழியால் அவர்கள் பேச்சு தாக்குறுகின்றது என்பது அவர்களுடைய சமூக நிலையைப் பொறுத்து அமைகின்றது. மலேசிய நாட்டுச் சூழலில் அவர்கள் எந்த சமூகத்தினரின் சூழலில் அதிக நேரத்தைக் கழிக்கின்றனரோ அம்மொழித் தாக்கம் அதிகம் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. குறிப்பாக, ஆங்கிலம் மொழித் தாக்கம் அதிகம் தமிழ் மொழியில் இருப்பதைக் காண முடிகிறது. ஆங்கிலமொழித் தாக்கம் அனைத்துத் தரப்பினரையும் பாதித்து வருவது கண்கூடு. இது உலகமயத்தினால் ஏற்பட்ட விளைவோ என்று எண்ணும் அளவிற்குத் உலகத்தைப் பாதித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் மொழியைப் போன்று பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் மொழி உலகில் வேறும் எதுவும் இருக்காது என்று கூறலாம்.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழி தமிழாக இருக்குமா என்று ஐயறும் அளவிற்கு பிறமொழித் தாக்கம் தமிழ் மீது பாய்ந்துள்ளது என்பது நாம் நன்கு கவனித்தால் புலனாகும்.

தமிழ் மொழியின் இத்தகைய நிலைக்கு ஒலிஒளி ஊடகங்களின் பங்கு மிக அதிகம். அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து உலகம் முழுமைக்கும் ஒலிஒளியேறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாகத்தான் இம்மொழிச் சிதைவு மேலும் மோசமாகிக் கொண்டு வருகின்றது என்பது கண்கூடு.  தமிழகத் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் படைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மொழிக் கொள்கையையும் மொழித்திட்டமிடுதலையும் அமைத்துக் கொடுத்துத் தமிழ் மேலும் சிதைவுறாமல் தடுப்பது இன்றைய அவசரத் தேவையாகும். 
  
பரிந்துரைகள்/தீர்வுகள் / தீர்மானங்கள்

முதலில் ஆசிரியர்கள் / விரிவுரையாளர்கள், தமிழ் மாணவர்கள், தமிழ் அதிகாரிகள், பொதுவாகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள்  பேசும் தமிழ் எப்படி இருக்கின்றது என்பதை தன்மதிப்பீடு செய்தல் வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், ஆசிரியக் கல்வி நிறுவனங்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ்ப் பிரிவுகள், இடைநிலைப்பள்ளிகள், தொடக்கப் தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள் போன்ற இடங்களில் பணியாற்றும்
தமிழ் விரிவுரையாளர்கள், அமைச்சு அதிகாரிகள், மாநில மாவாட்ட அதிகாரிகள் அலுவலர்கள், ஆசிரியர்கள் பிறமொழி கலவாத தமிழ் பேச உறுதி எடுத்துக்கொள்ளல் வேண்டும். அமல்படுத்தவும் வேண்டும்.


எல்லா இணைப்பாட நடவடிக்கைகளின்போதும் தமிழ் சார்ந்த இயக்கங்கள் பிறமொழிக் கலவாத தமிழ் பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எந்த முறைசார் நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கே பிறமொழிக் கலப்பின்றி நல்ல தமிழில் பேச உறுதி எடுத்துக் கொள்ள் வேண்டும்.

பிறமொழிக் கலவாத தமிழ் பேசும் இயக்கம் நாடு முழுவதும் பரப்புரை செய்யப்பட வேண்டும்.
ஆங்கிலச் சொற்களைத் தமிழ்மொழியில் கலந்து பேசுவதையே ஒரு பெருமைக்குரிய செயலாக நினைத்துக்கொண்டு செயல்படும் தமிழகத் தொலைக்காட்சி நிலையங்களுக்கு அவர்கள் செய்யும் கைங்கரியங்கள் தமிழகத்திற்கு அப்பால் வாழும் உலகத் தமிழர்க்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகின்றது என்பதை உணர்த்தவேண்டும்.
குறைந்த பட்சம் தமிழக / மலேசிய தொலைக்காட்சி வானொலி நிலைய அறிவிப்பாளர்களை ஆங்கிலச் சொற்கலப்பின்றித் தமிழ் பேச வலியுறுத்தலாம். இதன் வழி தமிழ் மேலும் சீரழிவதைத் தடுத்து நிறுத்தலாம்.  

தமிழக ஊடகங்களுக்கென்று அதுவும் குறிப்பாக ஒலிஒளி ஊடகங்களுக்கென்று  மொழிக்கொள்கையும் மொழித்திட்டமிடுதலும் அவசியம் ஏற்படுத்தவேண்டும். 
மலேசிய ஒலிஒளி ஊடகங்களுக்கும் மொழிக் கொள்கையும் மொழித்திட்டமிடுதலும் தேவைப்படுகின்றது.  
துணை நூல்கள்

கருணாகரன், கி., (1981) மொழி வளார்ச்சி. சிதம்பரம்: மணிவாசகர் நூலகம். 

கருணாகரன், கி., சண்முகன், செ., & ஜெயா,வ., (19900 தமிழ் கற்பித்தல் (புதிய அணுகுமுறைகள்). கோயம்புத்தூர்: தமிழ்நாடு தொழில்நுட்ப அமைப்புக்கழகம் 
நடராஜன், எஸ்., (2005) கல்வியில் ஆராய்ச்சி சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ்
சக்திவேல், (1999) ஆராய்ச்சி நெறிமுறைகள், சன்னை:மணிவாசகர் பதிப்பகம்
மலேசியக் கல்வி அமைச்சு ஆசிரியர் பயிற்சிப் பிரிவு ஆவணங்கள் (2003) குவாலா லும்பூர், மலேசியா.

Thursday 2 August 2012

மொழியாசிரியர்கள் திறம்பட மொழி கற்பிக்க என்ன செய்ய வேண்டும்


வகுப்பில் மொழி கற்பிக்கும் அணுகுமுறைகள்

பாடத்திட்டத்தில்  உள்ளமாதிரி  பருவத் திட்டத்தின் அடிப்படையில் திறன்

இதற்கு அப்பால் இணைத் திட்டம் என்ற ஒன்று கட்டாயம் தேவை

இணைத் திட்டத்தில் எதை இணைத்துக்கொள்ளலாம்?

மாணவர்கள் சுயமாகத் தங்கள் மொழியாற்றலை வளர்க்கச்  சில திட்டங்களை மேற்கொள்ளல் வேண்டும்   

பேச
செவிமடுக்க
வாசிக்கச் சில திட்டங்களை அமல்படுத்த வேண்டும்
எழுத
மொழிக்கழகம்
பேச
செவிமடுக்க
வாசிக்க
எழுத
மாணவர்கள் சுயமாக எதை வாசிக்கத் தூண்டலாம்?
சுட்டி
கோகுலம்
அம்புலிமாமா
கதைப் புத்தகங்கள்
நாளிதழ்கள்
சிறுவர் அரங்கம்
பயனீட்டாளர்  குரல்
மாணவர்களின் வயதிற்குப் பொருத்தமான நூல்கள்

ஆர்வத்தைத்  தூண்டும் நூல்கள் ஆங்கிலத்தில் வாசிக்க
மலாய் மொழியில் வாசிக்க ஆசிரியர்கள் வாசிக்கிறோமா?

நாம் என்ன வாசிக்கலாம் ?

நாளிதழ்கள்
வாரமாத இதழ்கள்
உங்கள் குரல்
பயனீட்டாளர்  குரல்
இதயம்
மயில்
சுட்டி மயில்
செம்பருத்தி
தமிழ்க் கம்யூட்டர்
தென்மொழி
செந்தமிழ்ச்செல்வி
கணையாழி
காலச் சுவடு

Saturday 28 July 2012

இன்றைய கல்வி முறை - சரியான பாதையில் போகிறதா?

இன்றைய கல்வி முறை சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறதா என்று கல்வியாளர்கள் மிக அவசரமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். கல்வி என்பது இப்பொழுது வணிக மயமாகிவிட்டது.


Saturday 14 July 2012

பண்பாடு தழுவிய தமிழ் கற்றலும் கற்பித்தலும்

இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி சம காலத்தேவைகளுக்கே முக்கியம் கொடுத்துத்  தங்கள் கல்விப்பயணத்தை முன்னெடுத்துச்செல்கின்றனர். அதுவும் குறிப்பாகத் தேர்வு வகுப்புகளில் பயில்கின்ற மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி முற்றாகத் தேர்வுக்கே முன்னுரிமையும் முக்கியத்துவம் கொடுத்து பாடத்தைப் பயில்கின்றனர். பயிற்றுவிக்கின்றனர். இதன் விளைவாகக் கல்வி ஏற்பாட்டின் நோக்கத்தை முழுமையாக அடைய முடியாத நிலை ஏற்படுகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.  முழுமையான சமன்சீர்  வளர்ச்சியடைந்த மாணவமணிகளை (மனிதர்களை) உருவாக்கும் உன்னத  நோக்கமும் இதனால் அடைய முடியாத நிலை ஏற்படுகின்றது. கல்வி ஏற்பாட்டில் வலியுறுத்தப்படுகின்ற ஆன்ம, அறிவு, உடல், உள்ளத் தேவைகளுள் அறிவுத்தேவைக்கு மட்டுமே முக்கியத்துவம்  கொடுக்கப்படுகின்றது.  உடல்வளர்ச்சித் தேவையும் உள்ள வளர்ச்சித் தேவையும்  ஆன்மீக வளர்ச்சியும் புறந்தள்ளப்படுகின்றன. இவற்றோடு சேர்ந்து பண்பாட்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல் ஓரங்கட்டப்படுகின்றன. இச்சூழலிருந்து மீள மொழியாசிரியர்கள பெரிதும் பங்காற்ற முடியும். மொழித்திறன்களாகிய பேசுதிறன், செவிமடுத்தல் திறன், படித்தல் திறன், எழுதுதிறன், இலக்கணம், இலக்கியம் ஆகிய கூறுகளோடு பண்பாட்டுக்கூறுகளையும் இணைத்துக் கற்றல் கற்பித்தலை மேற்கொண்டால் குறுகிய நோக்கக்கல்வியின் எதிர்மறை விளைவுகளிருந்து மாணவர்களைக் காப்பாற்றலாம்..
இன்றைய கல்வி முறையில் பலவற்றைப் புகுத்திக் கற்பிக்கவேண்டும் என்று கல்வி ஏற்பாடு எதிர்பார்க்கின்றது. பொது அறிவு, நற்பண்பு (மனித விழுமியங்கள்), சமுதாய பண்பாட்டு நெறிமுறைகள், பல்வகை நுண்ணறிவு, வாணாள் கல்வி, எதிர்காலவியல், தகவல் தொழில் நுட்பத்திறன், தொழில்முனைவம், ஆக்கமும் புத்தாக்கமும்,  குடிமையியல், சிந்திக்கும் திறன் அல்லது சிந்திக்கும் வழிமுறை, சுற்றுசூழல் கல்வி, அறிவியல் திறன், சிக்கல் தீர்வு, பயனீட்டாளர் கல்வி போன்ற கூறுகளை பாடத்தின்போது புகுத்த வேண்டும் என்று மலேசிய தொடக்கப்பள்ளித் தர ஆவணம் பரிந்துரைக்கின்றது. இவற்றோடு பண்பாட்டுக்கூறுகளையும் நமது பாடத்தில் புகுத்தினால் சமன்சீர் மாந்தன் உருவாக வாய்ப்புள்ளது.  
பண்பாடு என்றால் என்ன?
பண்பாடு பற்றிப் பலர் விளக்கம் கூற முற்பட்டுள்ளர்.  அவர்களுள் அறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள்  தந்த விளக்கம் இங்குக் கருதத் தக்கது. சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டையே பண்பாடு என்கின்றோம் என்கின்றார் அவர். அந்த வெளிப்பாடு சுவையுணர்வாகவும் நடையுடை பாவனையாகவும் தோன்றும். அது மக்கள் கூட்டத்தின் சிறப்பியல்பாகவும்  தனி மக்களின் சிறப்பியல்பாகவும் விளங்கும்போதே பண்பாடு எனக் குறிக்கப்படுகின்றது என மேலும் விவரிக்கின்றார் தெ.பொ.மீ.  மக்களின் பழைய வரலாற்றில் அவர்கள் இயற்றிக்கொண்ட கருவிகள், சமூகப்பழக்கம், வழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றை பண்பாடு என்ற சொல்லால் குறிக்கின்றனர் என . தட்சணாமூர்த்தி குறிப்பிடுகின்றனர். பண்பாடு என்பது மனிதன் சமூகத்தில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு பெற்ற அறிவு, போற்றிய நம்பிக்கை, கலை, நெறி, சட்டம், சமூக வழக்கம், மனிதனின் இதர ஆற்றல்கள், பழகிக்கொண்ட பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலும்செறிவும் மிக்க ஒரு முழுமைத்தொகுப்பு எனப் பண்பாடு எனும் சொல்லிற்கு வரையறை கூறியுள்ளார் பிரிட்டிஷ் மாந்தவியல் தந்தை எனப் போற்றப்படும் டைலர் (Tylor). Culture is defined as ‘that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society’ இவ்வளவு செறிவுமிக்க பண்பாடு பற்றிய அறிவு மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?     
பாடத்தில் புகுத்துவற்குரிய  பண்பாட்டுக்கூறுகள்
தமிழர் வரலாறு, உடை, இறப்பு, ஈமச்சடங்கு, தமிழர் விளையாட்டுகள், சமய வாழ்வு, தமிழர்  நம்பிக்கைகள், சமய விழாக்கள், தமிழர் இசை, சிற்பக்கலை, தமிழர் நடனம்/ நாட்டியக் கலை, கட்டிடக்கலை, ஓவியக்கலை, தமிழர் மருத்துவம் போன்றைவையாகும்.
பண்பாடு பற்றிய அறிவினால் விளையும் நன்மைகள்
பண்பாட்டினால்  உள்ளொளி பெருகும்; உயிர்த்தத்துவம் மிளிரும்; பிறர் மீது அன்பும் அருளும் மிகும்; சமுதாயத்தில் உள்ள விழுமியங்கள் சமுதாய உறுப்பினர்களாகிய மாணவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைகின்றது. அதனைப் பின்பற்றி வாழவும் இது வழிவகுக்கின்றது. |

சமுதாயத்தில்
  ஒரு தீவாக வாழாமல் தோப்பாக வாழும் நிலைக்கு உயர்த்தப்படும். தனி மரம் தோப்பாக ஆகாது என்பன போன்ற விழிப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. சமூக உறுப்பினர்களின் செயற்பாட்டினை, சமூகப் பழக்கவழக்கங்களை அறிந்து ஊரோடு ஒட்டி வாழும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தப் பண்பாட்டுக்கல்வி உதவும் .  .

எப்படிப் பண்பாட்டுக்கூறுகளைப் பாடத்தில் புகுத்துவது?
எல்லா வேளயிலும் பண்பாட்டுக்கூறுகளைப் புகுத்த முடியுமா? பொருத்தமான இடங்களில் மட்டுமே புகுத்துதல் சிறப்பு. பண்பாட்டைப் போதிக்கப்போகின்றேன்  என்று எடுத்துக்கொண்ட பாடநோக்கத்தை விட்டு விலகுதல்  சரியன்று. பள்ளிகளில்; பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றுள் மொழிப்பாடமே பண்பாட்டுக்கூறுகளைப் புகுத்தப் பொருத்தமான பாடமாக அமைகின்றது. மொழிப்பாடத்தில் பொதுவாக பாடப்பொருள், மொழித்திறன் , ஒருங்கிணைப்பு நிகழ்வது வழக்கம். அவற்றோடு  பண்பாட்டுக்கூறுகளையும் இணைத்துக்கற்பித்தால் மொழித்திறனோடு பண்பாட்டையும்  அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
பண்பாடு தழுவிய இலக்கணப்பாடம்
இலக்கணம் கற்பிக்கும்பொழுது நமது பண்பாடு தொடர்பான செய்திகளைப் புகுத்தலாம்.  பெயர்வகைகள் கற்பிக்கும்பொழுது குறிப்பாகக் காலப்பெயர் பற்றி விளக்குபொழுது நமது தமிழ் மாதங்களாகிய சித்திரை வைகாசி ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களை  வரிசைக் கிரமமாகச் சொல்லப் பயிற்றுவிக்கலாம். இதன்வழி ஆங்கில மாதத்தைத்  தமிழ் மாதத்தையும்  அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.   இதனோடு நம் சமுதாயத்தினர் கொண்டாடும் சமய விழாக்களயும்  அவ்வமயம் நாம் அறிமுகப்படுத்தலாம்.  ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கொண்டாடப் படுகின்ற தமிழ்ப் பண்டிகைகள், திருவிழாக்கள் பற்றிக் கற்பிக்கலாம்.

சித்திரையில்
, சித்திரைப் பருவம், வைகாசியில் விசாகம், ஆனி மஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணியில் புதுமனை புகுதல், புரட்டாசியில் நவராத்திரி , விநாயகர் சதுர்த்தி, ஐப்பசியில் தீபாவளி, கந்த சஷ்டி விரதம்,  கார்த்திகையில் கார்த்திகைத் தீபம், மார்கழியில் பாவைநோன்பு, திருவாதிரை, தையில் தைப்பூசம் போன்ற சமுதாய சமய நிகழ்வுகள் அவர்களுக்குத் தாங்கள் சார்ந்த சமய அறிவும், சமூக அறிவும் பெற்று நல்ல குடிமகனாக வாழும் வாய்ப்பை ஏற்படுத்தும். இதே போன்று இடப்பெயர் பற்றிக் கற்பிக்கும்பொழுது தமிழர் ஐவகை நிலப்பாகுபாடு பற்றிக் குறிப்பிடலாம்.


இலக்கணம் கற்பிக்கும்பொழுது சூழ்நிலைக்கேற்ப நமது  பண்பாடு தொடர்பான செய்திகளைத் தகவலாகக் கூறிச்செல்லாம். இலக்ணப்பாடத்தை வெறும் இலக்ணப்பாடமாக நடத்தாமல் மாணவர்களது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சமயச்செய்திகளும்  சமூகச் செய்திகளும் அவர்களைச் சமூகம் சார்ந்த மனிதர்களாக வாழ வழி வகுக்கும் என நம்பலாம்.
இலக்கியப்பாடத்தில் பண்பாடு
செய்யுள் கற்பிக்கும்பொழுது நமது பண்பாட்டில் போற்றப்படும்  விழுமியங்கள் இயல்பாகவே அப்பாடத்தின் வழி மாணவர்களைச் சென்றடையும். ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,உலகநீதி, நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம், ,நாலடியார், திருக்குறள் முதலியவற்றை மொழிப்பாடத்தின்போது கற்பிக்கும்பொழுது நேரடியாகவோ  மறைமுகமாகவோ நமது பண்பாட்டின் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்குச் சென்றடைவதை உறுதி செய்யலாம்.
இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், நளவெண்பா, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை போன்ற கிராமிய, இதிகாசக் கதைகள், அவற்றில் உள்ள கிளைக்கதைகள்  கூட நமது பண்பாட்டினை வளர்க்கப் பெரிதும் பயன்படும். மேற்காணும் விழுமியங்கள் நிறைந்த  பண்பாடு தொடர்பான கதைகளை மொழிப்பாடத்தில் பயன்படுத்துவது பண்பாடு பேண உதவும்.   
பண்பாடும் மொழித்திறன்கள் கற்பித்தலும்
செவிமடுத்தல் திறன்
மொழிப் பாடத்தில்  பேசுதிறன் செவிமடுத்தல் திறன் கற்பிப்பது வழமையான ஒன்று. அவ்வமயம் பண்பாட்டுக்கூறுகளையும்   புகுத்தி மொழிப்பாடத்தை நடத்துவதற்கு இடம் உள்ளது. குறிப்பாக, நாடகம், கதை, கவிதை போன்றவற்றைச் செவிமடுத்தல் திறன் நடத்தும்பொழுது  பண்பாட்டுக் கூறுகள் உள்ள பாடப்பகுதிகளைப் பயன்படுத்தலாம். எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் உள்ள கதை, கவிதை, நாடகம்,

இசைப்பாடல் போன்றவற்றைத் தெரிவு செய்வது மாணவர்களின் பின்புல அறிவைப் பொருத்து ஆசிரியர் நிர்ணயித்துக் கொள்ளுதல் வேண்டும்.  இப்பொழுதெல்லாம் இணையங்களில் பல உரைகள், பாடல்கள், நாடகங்கள் காணப்படுகின்றன.  அவற்றை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். செறிவட்டுகளும் கூட சந்தையில் நிறையவே உள்ளன. சுகி.சிவம் போன்றோரின் சமய தன்முனைப்பு உரைகள் பெரிதும் மாணவர்களைக் கவரும் என்பது திண்ணம்.    
பேசுதிறன்
ஓரங்க நாடகங்கள் நடித்தல், நாடோடிப் பாடல்கள் பாடுதல், சொற்போர் பேசுதிறன் பாடத்தின்போது பண்பாடு தழுவிய  தலைப்புகளைப் பயன்படுத்தலாம்.   
வாசிக்கும் திறன்
வாசிப்புப் பாடம் நடத்தும்பொழுது கண்டிப்பாக ஆசிரியர் உரைநடைப்பகுதிகளை  மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. சிற்சில சமயங்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், உரையாடல் பகுதிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழல்களில் தேவைக்கேற்பப்  பண்பாடு தொடர்பான கருப்பொருளைக் கொண்ட பாடப்பொருளைப் பயன்படுத்தலாம். தமிழர் வரலாறு, உடை, இறப்பு, ஈமச்சடங்கு, தமிழர் விளையாட்டுகள், சமய வாழ்வு, தமிழர்  நம்பிக்கைகள், சமய விழாக்கள், தமிழர் இசை, சிற்பக்கலை, தமிழர் நடனம்/ நாட்டியக் கலை, கட்டிடக்கலை, ஓவியக்கலை, தமிழர் மருத்துவம்போன்ற தலைப்புகளில் உள்ள வாசிப்புப் பகுதிகளைப் பயன்படுத்தலாம்.
எழுது திறன்
மொழித்திறனில் கட்டுரைத்  தலைப்புகள் தெரிவு செய்யும்பொழுது பண்பாடு தொடர்பான தலைப்புகளைத் தெரிவுசெய்து மாணவர்கள் அதன் தொடர்பான ஆய்வுகளில் இறங்கும் சூழல் ஏற்படுத்தலாம்.  இதன் விளைவாக பண்பாட்டைப்பற்றி மேலும் விரிவாகவும் ஆழமாகவும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மொழிப்பாடத்தில் செயல்திட்டங்கள்
இப்பொழுதெல்லாம் கல்வி பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் மாணவர்களுக்குக் களஆய்வு மேற்கொள்ளும் சூழலை  ஏற்படுத்தி வருகின்றார்கள். செயல்திட்ட வடிவில் மதிப்பீடும் நடத்துகிறார்கள். இத்தகைய சூழல்களிலெல்லாம் பண்பாடு தொடர்பான தலைப்புகள் பண்பாட்டு அறிவினை வளர்க்கவும் கூர்மைப்படுத்தவும்  உதவும்
மொழிப்பாடத்தை வெறும் மொழி கற்பிக்கும் பாடமாகக் கருதாமல் அபாடத்தின் வழி பண்பாட்டுக்கூறுகளையும் புகுத்தினால் சமன்சீர் வளர்ந்த மாந்த இனத்தை உருவாக்க முடியும். தகவல் யுகத்தில் வெறும் தகவல் மட்டுமே தெரிந்த மனிதர்களை உருவாக்காமல் சமுதாயம் சார்ந்த மனிதர்களை உருவாக்கினால்  நாளைய உலகம் வெறும் எந்திர மயமான  உலகமாக இருக்காது. அன்பும் இரக்கமும் நிறைந்த மனித நேயமிக்க சமுதாயத்தை உருவாக்கிய புண்ணியம் நம்மையே வந்து சேரும்.    
துணை நூல்கள்
தட்சிணாமூர்த்தி, . (1999) தமிழர் நாகரிமும் பண்பாடும். சென்னை: யாழ் வெளியீடு
Lucy Mair (1975) An Introduction to Sociall Anthropology. London: Oxford University Press.
பாட்த்திட்டம்: தமிழ் மொழி. கல்வி அமைச்சு குவாலாலும்பூர் டெவான் பஹாசா டான் புஷ்தாக்கா (1983)
தமிழ்மொழித் தர ஆவணம் (2010) கல்வி அமைச்சு குவாலாலும்பூர்  பாட்த்திட்ட மேம்பாட்டுக் கழகம்
  கணிதப்பாட்த்தில் எண்கள் பற்றிக் கற்பிக்கும்பொழுது தமிழ் எண்களை அறிமுகப்படுத்தலாம்.